Subscribe:

இரு சக்கரங்களில் கண்டங்களைக் கடந்த ஒரு காதல் பயணம்

என்றும் இறவாத வரம் பெற்ற காதலுக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு Pradyumna Kumar Mahanandia மற்றும் Charlotte Von Schedvin ஆகியோரின் காதல்.
6 000 மைல்களைக் கடந்து தனது காதலியைக் காண்பதற்காக தனது கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொண்டு ஒரு பழைய சைக்கிளை வாங்கி இந்தியாவின் டில்லியிலிருந்து கண்டங்களைக் கடந்து சுவீடனிற்குச் சென்றிருக்கிறார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் குக்கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்த P.K. Mahanandia என்றழைக்கப்படும் குமார் டில்லியிலுள்ள வரைகலைக் கல்லூரியில் பயின்று ஒரு கை தேர்ந்த ஓவியராக  வெளியேறினார். 

அதனைத் தொடர்ந்து  படங்களை வரையும்  வீதிக் கலைஞராகக் குமார் மாறினார். 

குமார் பிறந்தபோது அவரது ஜாதகத்தைக் கணித்த சோதிடர் இவன் பெரியவனாகி தூரதேசத்தில் பிறந்த இசைக் கலைஞரைத்தான் திருமணம் செய்வான் என்றிருக்கிறார்.

அதையே தன் மனதில் எப்போதும் ஆழமாகப் பதித்து வந்துள்ளார் குமார். இது இவ்வாறிருக்க இங்கிலாந்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த Charlotte அங்கிருந்து ஒரு வாகனத்தில் இந்தியாவுக்கு 22 நாள் பயணத்தை மேற்கொண்டு 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்றார். Charlotte குமாரினுடைய ஓவியத் திறமையைக் கண்டு வியந்து தன்னையும் வரையுமாறு கேட்டுள்ளார். 
அப்போது 19 வயதேயான Charlotte இனுடைய அழகைக் கண்டு மயங்கிய குமார் அப்பெண்ணின் நீலக்கண்களில் தன் மனதைப் பறிகொடுத்தார். இந்த நிலையில் யாயரால்தான் மனதைக் கட்டுப்படுத்தி ஓவியத்தை வரைய முடியும்?
 
 என்னால் சரியாக வரைய முடியவில்லை  இன்று போய் நாளை வா என்ற தோரணையில் மீண்டும் மீண்டும் அழைத்திருக்கிறார்.

மூன்று தடவைகள் இவரைக் காண Charlotte உம் வந்திருக்கிறார். குமாரும் மூன்று ஓவியங்களை வரைந்து முடித்தார். பார்த்த இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கானவள் நீதான் என்று மதராசப்பட்டினக் காதல் கதையைத் திறந்திருக்கிறார்.

ஓவியரின் காதலில் கலந்து மயங்கிய Charlotte உம் அதற்குச் சம்மதம் சொல்லிவிட்டார். சோதிடர் சொன்னதுபோல Charlotte உம் ஒரு புல்லாங்குழல் கலைஞர் என்பதும் ஒரு சிறப்பு.

இரண்டு மூன்று வாரங்கள் ஒன்றாகவே சுற்றித் திரிந்த காதலில் ஒரு பிரிவு.

Charlotte தனது நாட்டிற்குச் செல்லவேண்டிய நிலை. தன்னுடன்  குமாரை வருமாறு கேட்டார். ஆனாலும் தனது சொந்த முயற்சியால் அவளைக் காண வருவேன் என்று தெரிவித்தார். 
ஆனாலும் அதற்கான பணம் அவரிடத்தில் இருக்கவில்லை. சுவீடனுக்குச்  சென்ற Charlotte குமாருடன் கடிதத் தொடர்பில் இருந்திருக்கிறார். 1977 ஆம் ஆண்டு கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொண்டு பழைய சைக்கிளை வாங்கி டில்லியிலிருந்து சுவீடனுக்குப் பணயமானார் குமார்.  கடும் சவாலாக அமைந்த 6 000 மைல்கள் (கிட்டத்தட்ட 10 000 கிலோமீட்டர்கள்) பயணத்தின் முடிவில் 4 மாதங்கள் 22 நாட்களின் பின் தனது காதலியைச் சந்தித்தார்.

தற்போது இந்த இணை 40 ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். 

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
குமார் தற்போது ஒரு வரைகலைஞராகச் சுவீடனில் பணிபுரிவதோடு அரசாங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் ஆலோசகராகப் பணிபுரிகிறார்.
இந்தக் காதல் இணைக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்.    

No comments:

Post a Comment

கருத்துக்கள்..