Subscribe:
'

எட்டுப்பேரப் பிள்ளைகளைக்கண்ட பிரித்தானியப் பெண் தனது 50 ஆவது வயதில் 4 பிள்ளைகளைப் பெறப்போகிறார்.

பிரித்தானியாவில் வாழும் பெண் தனது 50 ஆவது வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளைப் பெறப்போகும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறப்போகிறார்.

ஏற்கனவே 3 பிள்ளைகளுக்குத்தாயான இவர் அவர்கள் மூலம் பிறந்த 8 பேரப்பிள்ளைகளைக் கண்டுள்ளார். 
Tracey Britten என்ற பெண் IVF எனப்படும் செயற்கைக் கருத்தரித்தல் மூலம் தனது இரண்டாவது கணவரின் விந்தைக் கொண்டு நான்கு குழந்தைகளைப் பெறவுள்ளார்.

இவரின் இந்த முயற்சி சாத்தியமற்றது என மருத்துவர்கள் முதலில் கூறியிருந்தனர். 


ஆனால் கரு முட்டைகள் 4 ஐக் கொண்டு இவர் ஒத்த இரட்டையர்களாக இரு பெண் குழந்தைகள்  மற்றும் ஒரு ஆண் குழந்தை ஒரு பெண்  குழந்தை  என மொத்தமாக நான்கு குழந்தைகள் கருவாகியுள்ளன. 

மருத்துவர்கள்  28 வாரங்கள் கூட அவை நீடிக்காது எனப் பின்னர் தெரிவித்தாலும் தற்போது இப்பெண் தனது 30 ஆவது வாரக் கருவைச் சுமக்கின்றார்.
2018 நவம்பர் மாத முற்பகுதியில் இவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் கிடைக்கவுள்ளன.

தற்போது வாராவாரம் அவருக்கான கண்காணிப்புக்கள் செய்யப்படுகின்றன.தற்போது 


இரு சக்கரங்களில் கண்டங்களைக் கடந்த ஒரு காதல் பயணம்

என்றும் இறவாத வரம் பெற்ற காதலுக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு Pradyumna Kumar Mahanandia மற்றும் Charlotte Von Schedvin ஆகியோரின் காதல்.
6 000 மைல்களைக் கடந்து தனது காதலியைக் காண்பதற்காக தனது கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொண்டு ஒரு பழைய சைக்கிளை வாங்கி இந்தியாவின் டில்லியிலிருந்து கண்டங்களைக் கடந்து சுவீடனிற்குச் சென்றிருக்கிறார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் குக்கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்த P.K. Mahanandia என்றழைக்கப்படும் குமார் டில்லியிலுள்ள வரைகலைக் கல்லூரியில் பயின்று ஒரு கை தேர்ந்த ஓவியராக  வெளியேறினார். 

அதனைத் தொடர்ந்து  படங்களை வரையும்  வீதிக் கலைஞராகக் குமார் மாறினார். 

குமார் பிறந்தபோது அவரது ஜாதகத்தைக் கணித்த சோதிடர் இவன் பெரியவனாகி தூரதேசத்தில் பிறந்த இசைக் கலைஞரைத்தான் திருமணம் செய்வான் என்றிருக்கிறார்.

அதையே தன் மனதில் எப்போதும் ஆழமாகப் பதித்து வந்துள்ளார் குமார். இது இவ்வாறிருக்க இங்கிலாந்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த Charlotte அங்கிருந்து ஒரு வாகனத்தில் இந்தியாவுக்கு 22 நாள் பயணத்தை மேற்கொண்டு 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்றார். Charlotte குமாரினுடைய ஓவியத் திறமையைக் கண்டு வியந்து தன்னையும் வரையுமாறு கேட்டுள்ளார். 
அப்போது 19 வயதேயான Charlotte இனுடைய அழகைக் கண்டு மயங்கிய குமார் அப்பெண்ணின் நீலக்கண்களில் தன் மனதைப் பறிகொடுத்தார். இந்த நிலையில் யாயரால்தான் மனதைக் கட்டுப்படுத்தி ஓவியத்தை வரைய முடியும்?
 
 என்னால் சரியாக வரைய முடியவில்லை  இன்று போய் நாளை வா என்ற தோரணையில் மீண்டும் மீண்டும் அழைத்திருக்கிறார்.

மூன்று தடவைகள் இவரைக் காண Charlotte உம் வந்திருக்கிறார். குமாரும் மூன்று ஓவியங்களை வரைந்து முடித்தார். பார்த்த இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கானவள் நீதான் என்று மதராசப்பட்டினக் காதல் கதையைத் திறந்திருக்கிறார்.

ஓவியரின் காதலில் கலந்து மயங்கிய Charlotte உம் அதற்குச் சம்மதம் சொல்லிவிட்டார். சோதிடர் சொன்னதுபோல Charlotte உம் ஒரு புல்லாங்குழல் கலைஞர் என்பதும் ஒரு சிறப்பு.

இரண்டு மூன்று வாரங்கள் ஒன்றாகவே சுற்றித் திரிந்த காதலில் ஒரு பிரிவு.

Charlotte தனது நாட்டிற்குச் செல்லவேண்டிய நிலை. தன்னுடன்  குமாரை வருமாறு கேட்டார். ஆனாலும் தனது சொந்த முயற்சியால் அவளைக் காண வருவேன் என்று தெரிவித்தார். 
ஆனாலும் அதற்கான பணம் அவரிடத்தில் இருக்கவில்லை. சுவீடனுக்குச்  சென்ற Charlotte குமாருடன் கடிதத் தொடர்பில் இருந்திருக்கிறார். 1977 ஆம் ஆண்டு கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொண்டு பழைய சைக்கிளை வாங்கி டில்லியிலிருந்து சுவீடனுக்குப் பணயமானார் குமார்.  கடும் சவாலாக அமைந்த 6 000 மைல்கள் (கிட்டத்தட்ட 10 000 கிலோமீட்டர்கள்) பயணத்தின் முடிவில் 4 மாதங்கள் 22 நாட்களின் பின் தனது காதலியைச் சந்தித்தார்.

தற்போது இந்த இணை 40 ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். 

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
குமார் தற்போது ஒரு வரைகலைஞராகச் சுவீடனில் பணிபுரிவதோடு அரசாங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் ஆலோசகராகப் பணிபுரிகிறார்.
இந்தக் காதல் இணைக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்.    

வெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்?

முட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது? என்று.

 மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொண்டது என்றும் வெள்ளை முட்டை சுவையானது என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஆக ஆரோக்கியமான உணவு என்றால் அது மண்ணிற முட்டை என்றே முடிவாகிறது. அத்தோடு அதிக விலைக்கும் அது விற்கப்படுகிறது.

உண்மையில் இரு வகை முட்டைகளும் சம அளவான சத்துக்கள் கொண்டதாகவே உள்ளன.

முட்டை ஓடு மட்டுமே வேறு நிறமாக இருக்கும்.

எதனால் இந்த நிறமாற்றம் என்றால் முட்டையை இடும் கோழிகளின் செவியின் நிறமே முட்டையின் நிறத்தைத் தீர்மானிக்கிறதாம்.

வெள்ளைச் செவி கொண்ட கோழி இடுவது வெள்ளை முட்டையாகவும், மண்ணிற செவி கொண்ட கோழி  மண்ணிற முட்டையாகவும் இடுகிறது.

ஆனாலும் ஏன் விலையில் வித்தியாசம் ஏற்படுகிறது என்று நீங்கள் நினைத்ததுண்டா?பொதுவாக மண்ணிற செவி கொண்ட கோழிகள் அளவில் பெரியதாக இருப்பதால் அவற்றைப் பராமரிக்க அதிகம் செலவாகிறது.
எனவேதான் அவற்றின் முட்டைகளும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

நேரத்தைச் சிக்கனமாகச் சேமிக்கச் சில வழிகள்

கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் திரும்பக் கிடைக்காதது.

ஒவ்நேவொரு நிமிடமும் சிறியதாகத் தெரிந்தாலும் அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் பெரிய மாற்றத்தைக் காணலாம்.

நாங்கள் தடுமாறும் தருணங்களால் செலவிடும் நேரத்தின் அளவை கணக்கிட முடிந்தால்  நாங்கள் இழந்தது பெரிதாகத் தெரியும்.

திறமையாகக் கையாளத் தெரிந்தால் அட்டகாசமான அதிரடித் திருப்பங்களை வாழக்கையில் காணலாம்.

இதோ உங்களுக்காகச் சில யோசனைகள்.

1. இரண்டு மனம் வேண்டும் என்பதுபோலச் சில சந்தர்ப்பங்களில் தோன்றலாம். இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் வரும்போது நாணயத்தைச் சுழற்றுங்கள்    பூவா தலையா போட்டுப் பாருங்கள். முக்கிய முடிவு எடுக்கும் தலைவலி இல்லை.


2. மேடையில் பேசவேண்டி ஏற்படும்போது....

எல்லோருக்கும் மேடைப்பேச்சு கைவந்த கலையாக அமைவதில்லை.ஆனாலும் மேடையில் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கும்போது மறுக்காது ஏற்றுக் கொள்ளுங்கள். பேச்சைத் தயார் செய்யுங்கள். அதனைத் தாளில் அச்சாக்கியோ அல்லது எழுதியோ வைத்துக்கொள்ளும்போது ஒவ்வொரு நான்கு வரிகளையும் வேறு நிறங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாளை மேடையில் வைத்து உரையாற்றும்போது ஒரு நீர்ப் போத்தலையும் கூடவே வைத்திருங்கள். அவ்வப்போது நீரை அருந்தும் இடைவெளியில் சிந்தனைகளைக் கோர்ப்பதற்கான சந்தரப்பமாக ஆக்கிக் கொள்ளலாம். பேச்சாளர் தயார்.


3.  சிந்தாமல் சிதறாமல் மையைச் சேமிக்க. 

கணினியில்  Printout எடுக்கும்போது எழுத்துக்களின் நிறத்தை கறுப்பாக அல்லாது சாம்பல் நிறத்தில் (Grey) மாற்றுங்கள். இது மையைச் சேமிப்பதோடு வேகமாகவும் அச்சாகிறது.4. மருந்து எடுப்பது மறந்து போகிறதா

தினமும் மருந்து எடுக்கவேண்டியவர்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சனையே இன்றைய மருந்தைக் குடித்தேனா இல்லையா என்பதுதான்.
குளிகைக் குப்பியை ஒரு முறை பயன் படுத்தியபின் தலைகீழாக வையுங்கள். மறுமுறை பயன்படுத்தும்போது நேராக வையுங்கள். இது இலகுவானதாகவும் மறக்க முடியாததுமான பயிற்சியாக அமையும்.5. தூக்கமின்மையா?

மூச்சை நான்கு செக்கன்களுக்கு உள்ளே இழுத்துக் கொண்டு 7 செக்கன்கள் வைத்திருங்கள் பின்பு வாய் வழியாக 8 செக்கன்களுக்கு வெளிவிடுங்கள்.

இந்தப் பயிற்சி மூலம் 1 நிமிடத்தினுள் தூக்கம் உங்களைத் தழுவுமாம்.


நிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்

கனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

  சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான சூழல் கொண்ட நகரங்கள், சிறந்த கல்வித் தரம், உயர்வான பல்கலைக் கழகங்கள், சிறந்த நீர்வளம், பல்லின சமூக வாழ்க்கை, சிறந்த சுகாதார வசதி எனப் பல வகைச் சிறப்புக்களைக் கொண்டது கனடா.
கனடாவில் வசிக்க விரும்பி நாள்தோறும் உலக மக்கள் அகதிகளாகவும் குடியேறிகளாகவும் மாணவர்களாகவும் தொழில் நிமித்தமாகவும் வந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் இங்கேயே தங்குவதற்காக நிரந்தர வதிவுரிமை (Permanent Resident) கோரி விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பிப்போர் நிரந்தர வதிவுரிமை பெற்று தொடர்ச்சியாக 4 வருடங்கள் கனடாவில் வதியுமிடத்து கனேடியக் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

நிலைமை இவ்வாறு இருக்க, கனேடிய வதிவுரிமையை வேண்டாம் என்று உதறித் தள்ளுவோருக்கான செயல்திட்டம் கனேடியக் குடிவரவு குடியகல்வுப் பிரிவால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து நடைமுறையிலிருக்கும் இத்திட்டம் பிரபலமானதாக இல்லாவிட்டாலும் அதனைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 5 205 பேர் விண்ணப்பித்து 17 பேருடையது மடடுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.  இவ்வாண்டு 2016 இல் 7 378 பேர் விண்ணப்பித்ததில் 20 பேருடையது மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது. எந்தவிதக் கட்டணங்களும் தேவையற்ற இந்த நடைமுறையில் 14 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படுகிறது.

தங்களுடைய எதிர்பார்ப்பு  நிறைவேறாதவர்களும், தங்கள் சொந்த நாட்டில் ஏற்படக் கூடிய இரட்டைக் குடியுரிமைச் சிக்கல் மற்றும் வேறு காரணங்களுக்காக இவ்வாறு கனேடிய வதிவுரிமையை மீள அளிக்கிறார்கள்.

இந்த நடைமுறையில் மீள ஒப்படைக்கப்படும் வதிவாளர்கள் மீண்டும் கனடாவுக்கு வருவதற்கு வெளிநாட்டவர்கள் கனடா வருவதற்கான நடைமுறைகளின் படி விசா தேவைப்படும். ஆனாலும் அவர்கள் கனடா வருவதற்கு எந்தத் தடைகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு June  வரையான காலப் பகுதியில் நிரந்தர வதிவுரிமையை மீளக் கையளித்தோர் பட்டியலில் முதல் இடத்தைச் சீனர்களும் இரண்டாவது இடத்தை இந்தியர்களும் பெற்றுள்ளனர்.
அந்தப்பட்டியல் எண்ணிக்கை அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ளது.

3,116
சீனா
1,347
இந்தியா
1,048
ஐக்கிய இராச்சியம்
932
தென் கொரியா
669
தாய்வான்
422
அமெரிக்கா
250
பிரான்ஸ்
238
ஜேர்மனி
212
பாகிஸ்தான்
200
எகிப்து
197
பிலிப்பைன்ஸ்
186
ஹொங்கொங்
184
லெபனான்

7 வயதுச் சிறுவனின் காதினுள் 14 புழுக்கள்

துருக்கியின் தென் பகுதியில் உள்ள அதானா என்ற இடத்தில் காது வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் காதை ஆராய்ந்த வைத்தியர் அதிர்ந்துபோனார். காரணம் அவனின் காதிற்குள் உயிருடன் புழுக்கள் நெளிந்ததைக் கண்டிருக்கிறார்.

10 நாட்களாகக் காதில் வலி மற்றும் கடி போன்றவற்றால் அவதிப்பட்ட 7 வயதுச் சிறுவனை அவனின் தந்தை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். சிறுவனின் காதிற்குள் இருந்த புழுக்களே இதற்கான காரணம் என்பதைக் கண்டுபிடித்த வைத்தியர் 13 புழுக்களை இடுக்கியின் உதவியோடு வெளியே எடுத்தார். 14 ஆவது புழு காதின் ஆழத்தினுள் சிக்கிக் கொண்டதால் அதனை அகற்ற சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

 ஈக்களின் ஆரம்பப் பருவ நிலையான இப் புழுக்கள் எவ்வாறு சிறுவனின் காதிற்குள் சென்றன என்பது குறித்து ஆராய்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே இவ்வாறு புழுக்கள் மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் இது ஒரு ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.